ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ முடித்தார்.
இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த “சோபா”. அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது.
1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். “வாடிக்கை மறந்தது ஏனோ” போன்ற காதல் பாடல்கள் “காதலிலே தோல்வியுற்றாள்” போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய ‘காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..’ என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.


