குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையட்டி தட்சிணாமூர்த்தி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் அனைத்து சிவன் கோவில்களிலும் குரு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் நவகைலாயங்களில் 5வது ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் இன்று குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது.
குரு பெயர்ச்சி விழாவிவை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு சிறப்பு யாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து 108 சங்குகளுக்கு அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் 108 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தனர்.


