அஜித் குமார், (மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அசித்து குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அசித்து குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.
அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.


