செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தென்தில்லை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு காலை மாலை நேரங்களில் சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிலையில் திருவிழாவில் இன்று 1008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் 1008 சங்கால் அபிஷேகம் செய்வதற்காக சங்குகளை கோபுரம் வடிவில் அமைக்கப்பட்டு சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன்பின்னர் நடராஜருக்கு 1008 சங்கால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. கோயில் தக்கார் கோகுல மணிகண்டன் கலந்துகொண்டனர். கோயில் அர்ச்கர்கள் பாலு, முத்துராமன் உள்பட அர்ச்சகர்கள் பூஜையை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பேரரவை அன்பர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


