மாணவ, மாணவியாகிய நீங்கள்தான் இந்தியாவின் வருங்காலத்தூண்கள். கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம் என்று பண்ணைவிளை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை தக்கர் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அவர் மாணவ மாணவிகள் மத்தியில் அவர் பேசுகையில், மாணவ, மாணவியாகிய நீங்கள்தான் இந்தியாவின் வருங்காலத்தூண்கள். கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம். நீங்கள் இந்த மாணவ, மாணவியர் பருவத்தில் உங்களின் ஒரே கடமை கல்வி, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் முழு ஆர்வம் செலுத்தி பள்ளிக்கூடத்தில் கல்வியையும், ஒழுக்கத்தையும் நன்கு கற்க வேண்டும். ஜாதி, மத பாகுபாடின்றி ஒற்றுமையுடன் நன்கு படித்து நீங்களும் முன்னுக்கு வந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கர் மேல்நிலை பள்ளியின் தாளாளர் ரவிராஜன், பங்கு தந்தை டேவிட்ராஜ், தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி, சார்பு ஆய்வாளர் மணி, ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெகநாதன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.