திருநெல்வேலி&தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளிலேயே ஓட்டை விழுந்தது. இந்நிலையில் அந்த ஓட்டை சீரமைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே மறு பக்கத்திலும் ஓட்டை விழுந்தது. அதன்பின்னர் இரண்டு பக்க பாலத்தில் உள்ள சாலையையும் சீரமைத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் நான்குவழிச்சாலை வல்லநாடு பாலத்தில் மீண்டும் ஓட்டை விழுந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரு பக்கமாக மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதனை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் வருகை தந்தனர். ஆனால் சுமார் 6 மாத காலமாகியும் இந்த பாலத்தில் ஏற்பட்ட ஓட்டை இன்னும் அடைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே விரைவாக இந்த பாலத்தில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


