
நெல்லை மாவட்டம், ரெட்டியார் பட்டி மெயின்ரோட்டில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் பரதேசி பிள்ளை மகன் சுந்தரி கண்ணன்(37). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். வல்லநாடு அருகே உள்ள அனந்த நம்பி குறிச்சிக்கு சவாரி வந்தபோது இவருக்கு பூர்வ ஜென்ம நினைவு வந்தது. தீடீரென்று அவர் ஆட்டோ ஓட்டுவதை மறந்து குதிரை வண்டி ஓட்டுவதாக உணர்ந்தார். மேலும் தார் ரோடு மணல் ரோடாக மாறியது போலவும் அவருக்கு தோன்றியது. இருபுறமும் மரங்கள் போல் இருந்தது. மேலும் இவர் மனநிலை 1000 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு சென்றது. அந்தசமயத்தில் அவர் ஸ்ரீவைகுண்டத்தினை ஆண்ட பாண்டிய மன்னராகவே மாறி விடட்£ர். பூர்வ ஜென்ம நினைவு வந்த காரணத்தினால் ஆட்டோவை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டார்.
பின் கொங்கராயகுறிச்சிக்கு வந்தார். அங்கு வந்த வுடன் அது தான் ஆண்ட நாடு என்றும் அங்கே அவர் கட்டிய கோயில் ஆற்று மணலுக்குள் புதைந்து கிடக்கிறது என்றும் அதை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவருக்கு தோன்றியது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ஆபிசுக்கு நடையாய் நடந்தார். இவரை பார்த்தவர்கள் முதலில் வேடிக்கையாக தவிர்த்தாலும் சில விஜயங்கள் அவர் பேசுவது உண்மையாகவே இருந்தது. ஆனாலும் மணலை தோண்டியெல்லாம் சோதனை செய்ய இயலாது. அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கைவிரித்து விட்டனர். இதற்கிடையில் திருவாதிரை நட்சத்திரம் மார்கழி மாதம் கோயில் பிரதிஷ்டை செய்த நேரம் என அவர் உள்ளுணர்வு கூறியது. எனவே அந்த நேரத்தில் எப்படியாவது மண்ணை தோண்டி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தார் கண்ணன். நேற்று முன்தினம் கொங்கராயகுறிச்சி வந்தார். அங்கு நாலு பேரை வேலைக்கு அமர்த்தி 10 க்கு 10க்கு அடி தோண்ட ஆரம்பித்தார்.
இதுபோன்று குழி தோண்டி கொண்டிருப்பது உள்ளூர் தலையாரி ஆனந்துக்கு தெரியவந்தது. அவர் குழி தோண்டுவதை தடுத்து நிறுத்தி விட்டு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கே வந்த தாசில்தார் தோண்டிய குழியை மூடச்சொல்லி விட்டு எச்சரித்து அனுப்பினார்.
முறைப்படி மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே குழி தோண்ட முடியும். எனவே மீறி தோண்டினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றவும். கண்ணன் குழியை மூடி விட்டார்.
அவரிடம் நிருபர்கள் கேட்டபோது,
நான் 1000 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தினை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன். என் பெயர் எனக்கு மறந்துவிட்டது. ஆனால் என் மனைவி பெயர் சுந்தரி. எனக்கு அண்ணன் ஒருவரும் உண்டு. என்னுடைய காலத்தில்தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. அந்த கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் என் நண்பர். ஆனால் எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். அதே போல் ஒரு கோயிலை கொங்கராயகுறிச்சியில் கட்டினேன். இந்த பகுதியிலே அதிக மல்லிகைபூ விளைந்த இடம் மணக்கரை. எனக்கு திருமணம் முடித்து மணக்கரையை ஆள வைத்தனர். அப்போது மல்லிகை விளைந்த காரணத்தினால் மல்லிக்கரை யாக இருந்த இடம் நான் மணமுடித்த இடமாக இருந்த காரணத்தினால் மணக்கரை என மாற்றி விட்டோம். இதற்கிடையில் நான் தஞ்சாவூர் கோயில் கும்பாபிசகேத்துக்கு செல்ல என் மனைவியுடன் கிளம்பும் போது, என்னை ஒரு தலையாக காதலித்த எனது பணிப்பெண் எங்கள் இருவரையும் விஷம் வைத்து கொன்று விட்டாள். நான் உயிரோடு இருந்திருந்தால் இந்த கோயிலையும் கும்பாபிசேகம் செய்திருப்பேன். அதன் பிறகு தம்பி இறந்த துக்கம் தாங்காமல் என் அண்ணன் இறந்து விடவே . கோயில் அப்படியே மண்ணுக்குள் புதைந்து விட்டது.
எனது காலத்திலும் ஆதிச்சநல்லூர் இருந்தது. அப்போது இதற்கு ஆதி நல்லூர் என்று பெயர். இங்கு தான் முதல் முதலில் கடலை விளைந்தது. எங்கள் காலத்தில் படுக்க வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் தான். அதற்கு முன்பே முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் ஆதிச்சநல்லூர் இருந்துள்ளது.
கொங்கராயகுறிச்சியில் நான் கட்டிய கோயில் வெள்ளத்தில் கோபுரம் அடித்து செல்லப்படவே தற்போது அடிப்பகுதி கோயில் உள்ளே உள்ளது. இது குறித்து நான் ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் பாஸ்கரன் இடம் சென்று தகவல் சொன்னேன். அவர் அடுத்த முறை வரும் போது உங்களிடம் ஆலோசனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் கோயில் இருப்பது உண்மை. என ஆணித்தரமாக கூறினார்.
இவர் கூறுவது வேடிக்கையாக பூர்வஜென்மம் என இருந்தாலும் கூட ஆதிச்சநல்லூர் எதிர்கரையில் உள்ள கொங்கராயகுறிச்சி ஒரு புதை நகரம் என ஆய்வாளர்களிடம் கருத்து இதில் ஒத்துப்போகிறது. மேலும் அடிக்கடி வெள்ளத்தில் அழியும் கிராமம். கொங்கராயகுறிச்சியில் மண்ணில் புதைந்த சட்டநாதர் கோயிலையே கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தான் பக்தர்கள் தோண்டி எடுத்துள்ளனர். எனவே இது யோசிக்கவேண்டியதாகவே உள்ளது.
கடந்த 31 ந்தேதி மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி படுகையில் ஆய்வு செய்ய மாநில அரசுவுக்கு மத்திய அரசு வருகிற செப்டம்பர் வரை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை கொண்டு கொங்கராய குறிச்சியில் நவீன கருவியை பயன்படுத்தி இவர் சொல்லும் இடத்தில் கோயில் உள்ளதா இல்லையா என ஆய்வு செய்வது அவசியமாகிறது. ஏதோ சொல்கிறார் என இந்த விஜயத்தை ஏனோ தானோ என்று விட்டுவிடவும் முடியாது.