தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மேற்படி கொலை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய காவல்ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முத்து கணேஷ், நம்பிராஜன் மற்றும் ராஜ பிரபு மற்றும் காவல்துறையினர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட பிரேம்குமார் என்பவருக்கும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் விக்னேஷ்வரன் (33) மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தததாகவும், அதன் காரணமாக ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரேம் குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் விக்னேஷ்வரன் (33), அவரது சகோதரர் இசக்கி கணேஷ் (30) புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டி (30), ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கர் கணேஷ் (30), புதுக்கோட்டை அய்யனார் காலணியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (25) மற்றும் தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (25) ஆகிய 6 பேரையும் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் பிரேம்குமார் கொலை வழக்கில் அதிரடியாக விரைந்து கைது செய்த தனிப்படை காவல் துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.