செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் பஞ்சாயத்து ஆகும். இந்த பஞ்சாயத்தில் போக்குவரத்து வசதி அதிகமாக இருக்கும் காரணத்தினால் அருகில் உள்ள கிராம மக்கள் இங்கே வந்து குடியேறி வருகிறார்கள். இதனால் ஜனத்தொகை ஏறிக்கொண்டே இருக்கிறது. செய்துங்கநல்லூர் புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு 10ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். எனவே செய்துங்கநல்லூரில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும். பொதுக்கழிப்பிடம் அமைக்கவேண்டும், தேங்கும் சாக்கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி கடந்த மாதம் குப்பைகளை அகற்றி தொடர்ந்து மக்கள் குப்பைபோடாமல் இருக்க விளம்பர பலகை நகரில் 10 இடங்களில் வைக்கப்பட்டது. இதனால் குப்பைகள் கொட்டவும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டது. இந்த பணியை பொதுமக்கள் பாராட்டி வந்தனர். தற்போது அடுத்த கட்டமாக சாக்கடைகள் அகற்றும் பணி துவங்கியது.
மிக அதிகமாக சாக்கடை தேங்கும் தென்னஞ்சோலை, 1வது வார்டு, துணை சுகாதர நிலையம் அருகில், மூப்பனார் தெரு, முஸ்லீம் புது தெரு ஆகிய தெருகளில் தேங்கி நிற்கும் சாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுத்து அதன் பணி நேற்று துவங்கியது. செய்துங்கநல்லூர் தனி அலுவலர் பாலசுப் பிரமணியன், பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தற்போது முஸ்லீம் தெருவில் சாக்கடை தூர் வாரும் பணிநடந்து வருகிறது. மற்ற இடங்களில் தொடர்ந்து சாக்கடை சுத்தப்படுத்தும் பணியை நடத்தவேண்டும். இந்த பணி தொய்வு விழுந்துவிடக்கூடாது என்றும், செய்துங்கநல்லூர் பஜாரில் நவீன கழிவறை வசதி செய்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


