ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக மத்திய அரசு சார்பில் அகழாய்வு கடந்த அக்டோபர் 10 தேதி முதல் நடைபெறுகிறது. தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் மழையினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தற்காலிக கூரைவேய்ந்து பணி நடைபெறுகிறது. இவ்விடத்தில் கடந்த 150 வருடங்களுக்கு முன்பிலிருந்து சுமார் 3500க்கு மேற்பட்ட காலம் வரை வாழ்ந்த மக்களின் அடையாளங்கள், தொழில் சாலைகள் நடத்தியதற்கான சுவடுகள் , முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் சுண்ணாம்பு தரை போன்ற ஒரு தளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தளம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டு இருக்குமோ என ஆய்வாளர்கள் சந்தேகிறார்கள். முழுவதும் ஆய்வு நடந்த பிறகு இது குறித்த முழு தகவல்கள் வெளியிடப்படும்.
2004ல் நடந்த அகழாய்வின் போது தியாக சத்திய மூர்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூர் சுவர் ஒன்று இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். அதுபோன்றே இந்த சுண்ணாம்பு தளமும் பல அபூர்வ தகவலைக் கொண்டிருக்கும் என ஆர்வலர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து பல முதுமக்கள் தாழிகள் ஆய்வாளர்களுக்குக் கிடைத்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு மக்கள் இந்த அகழாய்வு தளத்தினை கண்டு கழிக்க வந்தவண்ணம் உள்ளனர் .


