ஸ்ரீவைகுண்டம் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் கல்குவாரி லாரிகளை நிறுத்த வலியுறுத்தி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் அதிக முறை இந்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் வழியாக சென்று வருகிறது.
இதற்கிடையில் கருங்குளம் அருகே உள்ள மேலசிரியந்தூர் கிராமத்தில் கடந்த மாதம் இந்த கனரக லாரிகள் மோதியதில் 2 பேர் காயமடைந்ததாகவும், ஆடுகள் மீது லாரிகள் மோதியதாக கூறி நேற்று முன் தினம் 4 கல்குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும் சேரகுளம்&பருத்திப்பாடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் போலிசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்களுக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்த வழியாக லாரிகளை இயக்காமல் இருக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், மேலும் இந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைப்பதாகவும் வாக்கு கொடுத்தார். அதன்பின்னர் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


