ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில அரசு அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என்ற அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முதலில் ஆய்வு நடந்த இடமும் ஆதிச்சநல்லூர் தான். 1902 ல் ஆய்வு செய்த அலெக்ஸாண்டர் இரியா, இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் புதைக்கப்பட்டவர்கள் சுமார் 3400 வருடங்களுக்கு பழமையானவர்கள் என்றுரைத்தார். சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞரான பானர்ஜி அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் தாமிரபரணி கரை ஆதிச்சநல்லூர் நாகரீகம் என உறுதியளித்தார். இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு அறிக்கை 15 ஆண்டுகளை கடந்து வழங்கப்படவில்லை. எனவே எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் அகழாய்வு அறிக்கை தரவேண்டும், இங்கு கிடைத்த பொருள்களை இங்கேயே உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும், மீண்டும் அகழாய்வு தொடங்க வேண்டும்என வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையில் அருகில் உள்ள சிவகளையில் அகழாய்வு தளமுள்ளது என ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தனது மாணவர்களுடன் கண்டுபிடித்தார். வழக்கில் சிவகளையையும் ஆய்வு செய்ய வேண்டும் எனது கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் கீழடியை தமிழக அரசு திறம்பட ஆய்வு செய்து அகழாய்வு அறிக்கையை உடனே தாக்கல் செய்தது. இதுபோலவே மீண்டும் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில ஆய்வு செய்ய மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி கேட்டு வந்தது.
இதற்கிடையில் மதுரை ஐகோர்டு கிளையில் கடந்த மாதம் மத்திய அரசு இந்த நாலு இடங்களிலும் ஆய்வு செய்ய மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாதவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் உடனடியாக மத்திய அரசு மாநில அரசுக்கு அனுமதி தரவேண்டும் என கூறி, இந்த வழக்கை வருகிற 30 ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தற்போ இதற்கிடையில் இந்த நாலு இடங்களிலும் தமிழக அரசு ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான தகவலை தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதனால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அகழாய்வு நடைபெறும் போது உலக அரங்கில் தமிழர்களின் தொன்மை மிக தெளிவாக தெரியும். அதோடு மட்டுமல்லாமல் உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி தான் என நிரூபிக்க படும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


