தாமிரபரணி பாசனத்தில் இந்த ஆண்டு கார்சாகுபடி பொய்த்தது. ஜுன் மாதம் 1 ந்தேதி சாகுபடி ஆரம்பிக்க வாயப்பே இல்லை. குடிதண்ணீர் பாதிக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் 7 அணைக்கட்டு 11 கால்வாய் உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையணை, நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர் , சுத்தமல்லி அணைக்கட்டு மூலமாக சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு பிசானம் மற்றும் கார் சாகுபடி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டு வழியாக சுமார் 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கட்டில் பிசானம், கார் மற்றும் முன்கார் சாகுபடி என மூன்று போக வசதி உண்டு. இது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வாகும்.
இதில் பிசானம் மற்றும் கார் சாகுபடி உறுதியாகவும் நடைபெறும் . கோடைக்காலத்தில் தண்ணீர் இருப்பு நிலவரத்தினை அறிந்து முன்கார் சாகுபடியும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது தொடர்ந்து தாமிரபரணியில் ஏற்பட்டு வரும் பஞ்சம் காரணமாக இந்த வருடம் கார்சாகுபடி பொய்த்துவிட்டது. ஏற்கனவே மூன்று போகம் விளைந்த இடம் இரண்டு போகமாக மாறி கடந்த 5 வருடகாலமாக கார் சாகுபடி பொய்த்து வருகிறது.
இது குறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறும்போது, காலகாலமாக தாமிரபரணியில் உள்ள 7 அணைக்கட்டு 11 கால்வாயிக்கும் கார் மற்றும் பிசான சாகுபடி செய்ய அனுமதி உண்டு. முன்கார்சாகுபடிக்கு மட்டுமே அரசாணையை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். ஆனால் போதிய தண்ணீரை வைத்துக்கொண்டே கடந்த கார் சாகுபடியை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை செய்ய விடாமல் தடுத்து விட்டனர். தொடர்ந்து கடந்த ஆண்டு கார்சாகுக்கு அனுமதி கிடையாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிரித்த விட்டனர். பெரும்பாலுமே விவசாயம் நன்றாக நடந்தால் தான் பூமி நீர் சுழற்றியில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சாகுபடிக்கு தண்ணீர் தாராமல் தண்ணீரை பாவநாசம் மேல் அணையிலேயே மட்டும் தேக்கி வைத்து பொதுப்பணித்துறையினர் முறையற்ற முடிவால் பாபநாசம் அணையில் 9 அடி தண்ணீர் வற்ற காரமாண இருந்து விட்டார்கள். இது வரை தாமிரபரணி வரலாற்றில் இதுபோல் தண்ணீர் வற்றவில்லை. இது அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம். எனவே பொதுப்பணி த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி தண்ணீரை தேக்கி வைத்து கார் சாகுபடிக்கு கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்தால் தண்ணீர் சுழற்றிசியால் மீண்டும் தண்ணீர் ஆவியாக பொதிகை மலையில் மழை பொழியும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஆனால் இதை தற்போது பயன்படுத்துவதே இல்லை.இதனால் பாபநாசம் மேலணை வறண்டு விட்டது. என்று அவர் கூறினார்.
தாமிரபரணியில் பொறுப்பற்ற முறையில் இது போன்ற நீர் பகிர்மாணம் நடந்தால் விரைவில் வற்றாத ஜீவ நதி வற்றி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாக்ஸ்போடலாம்
குடிதண்ணீர் அதிகம் எடுப்பது கூட விவசாயத்தினை பாதிக்கும்.
குடிதண்ணீரையையும் தாமிரபரணியில் இருந்து முறையாக எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது. தாமிரபரணியில் ஒரு நாளைக்கு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 5 கோடி லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது. இதற்காக வல்லநாட்டில் இருந்து 12 உறிஞ்சும் கிணறுகள் மூலம் 2 கோடியே 70 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்கிறார்கள். தேவை 2 கோடியே 30 லட்ச ரூபாய் தான். ஆனால் தற்போது மருதூர் அணையிலிருந்து 282 கோடி ரூபாய் செலவு செய்து நாள் 1க்கு 9 கோடியே 70 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.. இதுபோல் தாமிரபரணியில் நெல்லை, தூத்துக்குடி , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு அளவுக்கு அதிகமாக குடிதண்ணீருக்கும், தொழிற்சாலைக்கு எடுத்து வருகிறார்கள். எனவே எதிர்காலத்தில் மூன்று போகம் விளைந்த தூத்துக்குடி மாவட்ட விளைநிலங்கள் போதிய மழை இல்லாவிட்டால் பாலைவனமாகிவிடும். எனவே தண்ணீரை தேக்கி வைக்க பல தடுப்பணைகள் தாமிரபரணியில் கட்டவேண்டியது அவசியமாகும்.மேலும் பொதிகை மலையில் மழை பொழிய காடுகளை காப்பாற்றுவதும் சாலச்சிறந்ததாகும். அதோடு மட்டுமல்லாமல் குடிதண்ணீரின் ஒரே ஒரு ஆதாரமான தாமிரபரணியை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாமிரபரணியை தூர் வாரி, உள்ளே கிடக்கும் கழிவு பொருள்களை அகற்றி அமலை செடிகளை அகற்றி வைப்பதும் மிக அவசியமாக உள்ளது. ஆனால் இதை நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர்கள் முன்னின்று நடத்திடவேண்டும்.