ஒட்டபிடாரம் தொகுதி வாக்கு பதிவு கருங்குளம் ஒன்றிய பகுதியில் பரபரப்பாக நடந்தது. பாராளுமன்ற தேர்தலை விட ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள வி.கோவில்பத்து, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, வசவப்பபுரம், ஆழிகுடி, கீழபுத்தனேரி, முறப்பநாடு புதுக்கிராம், முறப்பநாடு கோவில் பத்து, நாணல்காடு, மணக்கரை, வல்லநாடு, கீழ வல்லநாடு, வட வல்லநாடு, கலியாவூர், ஆலந்தா, பூவாணி, செக்காரக்குடி, எல்லைநாயக்கன்பட்டி, வடக்கு காரசேரி, சிங்காத்தாகுறிச்சி ஆகிய பஞ்சாயத்துகளில் நடந்தது.
இதில் செய்துங்கநல்லூர் காவல்நிலைய எல்கைக்கு உள்பட்ட இடத்தில் 6 தேர்தல் வாக்குசாவடியில் சராசரி 75 சதவீதம் வாக்கு பதிவுகளும், முறப்பநாடு காவல்நிலைய எல்கைக்குள் 23 வாக்குசாவடியில் 70 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
காலையில் மிகவும் சுறுசுறுப்பாக ஆரம்பித்த வாக்கு பதிவு கொளுத்தும் வெயிலில் மிகவும் மந்தமானது. ஆனாலும் மாலை 4 மணிக்கு மேல் சூடு பிடித்தது. இதனால் வேகமாக வாக்கு பதிவு நடந்தது. கடந்த பாராளுமன்றதேர்தலில் நடந்த வாக்கு பதிவை விட அதிகமான வாக்கு பதிவு நடந்தது. குறிப்பாக முத்தாலங்குறிச்சி பூத்தில் உள்ள 894 வாக்குகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 610 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 702 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 89 சதவீதமாகும்.
கருங்குளம் பகுதியில் ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி . முரளி ரம்பா, ஆகியோர் பார்வையிட்டனர்.