
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொல்லியல் அகழாய்வு பணிகள் கடந்த 10 ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு பணியானது ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளதற்கான முதற்கட்ட பணியாகும்.
இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அதே இடத்தில் கண்ணாடி மூலம் பாதுகாக்கப்பட்டு சைட் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியை மேற்கு வங்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த தலைமை வன காவலர் டாக்டர் சிங்கார குழந்தைவேலு வருகை தந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகள் குறித்தும், வருகின்ற காலங்களில் அமைய உள்ள அருங்காட்சியக பணிகள் குறித்தும் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு ஆதிச்சநல்லூர் ஆய்வாளகள்ர் அறவாழி, எத்தீஸ்குமார், முத்துக்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர். பின்னர் கடந்த 2004ம் ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட்டார். அங்குப் புதிதாக தோண்டப்பட்டு வரும் குழிகள் குறித்தும், அருகில் முதுமக்கள் தாழிகள் வெளியே தெரியும் இடங்களையும் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார். முன்னதாக சிவகளையில் கடந்த முறை அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட்டார். அவருக்கு சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீ வைகுண்டம் வருவாய் ஆய்வாளர்சிதம்பர நாதன், கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, சிவகளை ஆசிரியர் மாணிக்கம் உள்படப் பலர் உடன் இருந்தனர்.