
தென்னிந்தியாவிலேயே முதல் முதலில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ளது. இதற்காக நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்குத் திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியைத் துவங்குகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இந்த ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது. சுமார் 146 வருடங்களுக்கு முன்பே இங்கு அகழாய்வு நடந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வருடமும் இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 2019 மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1ம் தேதி மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலம் தனியாக பிரிக்கப்பட்டது. 160 மத்திய நினைவுச்சின்னங்கள் மற்றும் 21 மத்திய மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களைக் கொண்ட திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பாளராக அருண் ராஜ் நியமிக்கப்பட்டார். இந்த மண்டலம் பிரிந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வந்தது. இது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தொல்லியல் கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
முதல் கட்டமாக அருங்காட்சியகம் அமைக்க தேர்வு நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் , ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை முடுக்கிவிட்டு இடங்களைத் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட இடங்களைத் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ், தென் மண்டல இயக்குநர் பெங்களூர் மகேஸ்வரி, டெல்லி தொல்லியல் துறை நிர்வாக இயக்குநர் அஜய் அகர்வால், பொது இணை இயக்குநர் சஞ்சய் குமார் மஞ்சூர் உள்பட முக்கிய அதிகாரிகள் பார்வையிட்டனர். இவர்களோடு உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் வந்தனர். விரைவில் இங்கு அமையவுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் இவ்விடத்தில் மத்திய அரசு இந்த வருடம் அகழாய்வு செய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையையும் திருச்சி தொல்லியல் துறை மண்டலம் சார்பில் அதிகாரிகள் எடுத்து வந்தனர்.
இந்த வருடம் மத்திய அரசு அகழாய்வு செய்வது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் டெல்லிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தற்போது அதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது. இதனால் நாளை ஞாயிற்றுக்கிழமை(10.10.2021) காலை 7 மணிக்குத் திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியைத் துவங்குகின்றனர். மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது செய்யக்கூடிய அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் போது ஆதிச்சநல்லூரில் வைத்து காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகழாய்வு துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இரும்பு கால தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூரை , தொல்பொருள் தளமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.
தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் மத்திய நிதிநிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடி நாட்டில் “சின்னமான தளங்களாக” உருவாக்கப்படும் ஐந்து தொல்பொருள் தளங்களில் ஒன்றாக ஆதிச்சநல்லூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
2004-2005 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த முந்தைய சுற்று அகழ்வாராய்ச்சியின் போது மனித எலும்புக்கூடுகள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள், பானை ஓடுகள் மற்றும் இரும்புக்கால மக்களின் வாழ்விட தளத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளன. அதன் பிறகு ஆதிச்சநல்லூர் மீது இந்திய அரசுவுக்கு மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியது.
இந்தியத் தொல்லியல் துறை திருச்சி வட்டம் தற்போது ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்மொழிவை எடுத்துள்ளோம். இந்த திட்டத்தை இயக்குநர் ஜெனரல் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே நாளை முதல் 10.10.2021 ஆதிச்சநல்லூரில் அகழாய்வு துவங்க உள்ளது. இது தென்னிந்தியாவின் அமையவுள்ள ஒரே ஒரு தளமாகும். இந்தியாவில் உள்ள ஐந்து தொல்பொருள் இடங்களின் பட்டியலில் சின்னமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. திருச்சி வட்டம் தொல்லியல் நிபுணர் கண்காணிப்பாளர் டி.அருண் ராஜ் தலைமையில் இந்த அகழாய்வு நடைபெற உள்ளது. மத்திய தொல்லியல் துறை சென்னை வட்டத்தைப் பிரிப்பதின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய நிர்வாக வட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 160 மத்திய நினைவுச்சின்னங்கள் மற்றும் 21 மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள தளங்கள் திருச்சி தலைமையிடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் முதல் வருட நிறைவு விழாவை முன்னிட்டு இந்த பணிகளை திருச்சி தொல்லியல் துறை மண்டலம் செய்து வருகிறது.
வருங்காலத்தில் நடைபெறவுள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி ஒரு முக்கிய முயற்சியாக இருக்கும். “இது கிமு 1,000 க்கு முந்தைய நாட்டின் மிகப் பழமையான இரும்புகால தளங்களில் ஒன்றாகும். 2004-05 இல் கடைசி சுற்று அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசின் அனுமதியுடன் மாநில தொல்லியல் துறையும் ஆதிச்சநல்லூரில் தனி அகழ்வாராய்ச்சியை நடத்தியது. ஆனால் தற்போது ஆதிச்சநல்லூரில் உலக நாகரீகத்தின் தொட்டில் என வழங்கப்படும் இங்கு தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட அனைத்து பொருள்களையும் பார்வைக்கு வைப்பது. அதோடு மட்டுமல்லாமல் ஆய்வு நடந்த இடத்தில் கண்ணாடி மேற்கூரை அமைத்து அதன் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் ஐரோப்பா தரத்தில் அமைக்கப்பபட வுள்ளது.
இங்குத் தள அருங்காட்சியகத்தையும் அமைக்கும் பணியும், முற்காலத்தில் மீட்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் பணிக்கும் நாங்கள் அகழ்வாராய்ச்சியை ஒட்டிய நிலத்தை ஒதுக்கியுள்ளோம். இதற்காகத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நிலத்தினை தேடி எங்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். என்று மத்திய தொல்லியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிச்சநல்லூர், தாமிரபரணி தொல்லியல் கள ஆர்வலர்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூர் பல காலகட்டங்களில் துரதிஷ்டமாக வெளியே தெரியாமல் போய் விட்டது. 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை கேட்டும் போராட வேண்டியது இருந்தது. ஆனால் தற்போது தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, தொடர்ந்து திருச்சி மத்திய தொல்லியல் மண்டலம் சார்பில் ஆரம்ப கால கட்ட பணிகளை துவங்கியுள்ளது. இங்கே உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி துவங்கி விட்டது. தற்போது தமிழக அரசு சார்பில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமையவுள்ளது. தாமிரபரணி கரையில் தொடர்ந்து மத்திய மாநில அரசு தமிழரின் தொன்மையை அறிய தொல்லியல் துறை மூலம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையில் இடத்தேர்விற்கான அனைத்து பணிகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுத்த இடங்களைத் தூத்துக்குடி மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பார்வையிட்டுத் தேர்வு செய்தனர். இதனால் விரைவில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணியும், அதற்கான மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்யும் பணியும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அகழாய்வு செய்த மாநில அரசு இந்த நிதியாண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யவில்லை. சிவகளையிலும், கொற்கையிலும் அகழாய்வு செய்ய பணம் ஒதுக்கீடு செய்தும் ஆதிச்சநல்லூரைப் பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை. இதனால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. மாநில அரசு சார்பில் சிவகளை மற்றும் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் அகழாய்வு செய்து அந்த இடத்தில் சைட் மியூசியம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சமூக ஆர்வலர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.
பாக்ஸ்-2
2004 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை டாக்டர் சத்திய மூர்த்தி தலைமையில் ஆய்வு செய்தது. தற்போது மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட்டில் அறிவித்தபடி உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க, அடுத்த கட்டமாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற உள்ளது. இங்கு பொருள்கள் எடுக்கப்பட்டு, அவ்விடத்தில் கண்ணாடி மேல் நின்று அகழாய்வு நடந்த இடத்தினை பார்வையாளர்கள் காணும் வசதியுடன் ஐரோப்பா வில் உள்ள அருங்காட்சியகத்தினை மாதிரியாகக் கொண்டு அமைக்க உள்ளனர், இந்திய தொல்லியல் துறையினர். இதற்காகத் திருச்சி தொல்லியல் மண்டல கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு தற்போது நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான உழைத்த மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையிலான அனைத்து தொல்லியல் அலுவலர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும். பிரதமர் மோடி அவர்களுக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் அவர்களுக்கும், உதவி ஆட்சி தலைவர்கள் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்பட அனைத்து உள்ளங்களுக்கும் தொல்லியல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.