சிவகளையில் முதுமக்கள் தாழியில் கிடைத்த எலும்புகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் சேகரித்தார். ஆய்வு முடிவு முடிந்தவுடன் 6 மாத காலத்தில் தமிழரின் வரலாறு மிகப் பிரமாதமாகப் பேசப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் துவங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள், 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் சிவகளை அருகில் உள்ள ஸ்ரீமூலககரையில் கிடைத்துள்ளது. இரண்டு தடவை நடந்த அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்பட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த தடவை எடுக்கப்பட்ட பொருள்கள் பல்வேறு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடத்தில் உள்ள பானைகளைத் திறந்து அதில் கிடைத்த எலும்புகளைச் சேகரித்து ஆய்வுக்குக் காமராஜர் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்தது. அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள பொருட்களை எடுத்து மரபணு பரிசோதனை செய்வதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் வருகை தந்தனர்.
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஆய்வாளர்கள் முன்னிலையில் திறந்து உள்ளே கிடைத்த எலும்புகள் மற்றும் மண்ணை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் குமரேசன் பேசுகையில்,
தற்போது சிவகளை, ஆதிச்சநல்லூர் ,கொற்கை , கீழடி கொந்தகை உள்பட பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வுக்கான மரபணுசோதனைகளைசெய்ய உதவி வருகிறது. மரபணு பரிசோதனைக்காக 3 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணி மூன்று மாத காலத்தில் நிறைவடையும். அதன்பின்னர் மரபணு சோதனை மிகச்சிறப்பாக நடைபெறும். சிவகளையில் முதல் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களையும், தற்போது இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களையும் இந்த ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இந்த பணிகள் சுமார் 6 மாத காலத்தில் நிறைவடையும். இந்த ஆய்வு முடிவின் போது தமிழரின் நாகரீகம், பண்பாடு உலக அளவில் மிகப் பிரமாதமாகப் பேசப்படும் . என்று அவர் கூறினார்.
அங்கு அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், கொற்கை அகழாய்வு இயக்குநர் தங்கதுரை, சிவகளை ஆசிரியர் மாணிக்கம் உள்பட தொல்லியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


