ஸ்ரீ வைகுண்டம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு ராஜினாமா கடிதம். வாட்சப்பில் அனுப்பியதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்து கருங்குளம் ஒன்றிய அலுவலகத்துடன் உள்ளது.
இந்த பஞ்சாயத்தில் 9 வார்டுகள் உள்ளது. நடந்து முடிந்த கிராம உள்ளாட்சித் தேர்தலில் இந்த 9 இடத்திற்கும் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த பஞ்சாயத்தில் பஞ்சாயத்துத் தலைவராக ஆபிதா சலாம் உள்ளார். 9 வார்டுகளுக்கு முறையே அபுபக்கர், பத்மா, சீதாலட்சுமி, அனஸ் அப்பாஸ், சம்சுநிஷா, சேர்மத்துரை, ராஜாத்தி, காளியம்மாள், ஆறுமுகம் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒரு வருட காலத்திற்கு மேல் ஆகியும் கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் முறையாகச் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அந்த பகுதி மக்கள் அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்துத் தலைவரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுவரை இது சம்பந்தமாக முறையாக பணிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கொங்கராயகுறிச்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் தனித்தனியாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வாட்சப் நம்பருக்கு ஒரு பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளனர்.
அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஐயா வணக்கம், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொங்கராயகுறிச்சி ஊராட்சியில் தொடர்ந்து குடிதண்ணீர் பிரச்சனையும், தெருவிளக்கு பிரச்சனையும் இருந்து வருகிறது. இது தொடர்பாக ஊராட்சிமன்றத்தலைவி மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் வார்டு உறுப்பினர்களாகிய எங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாமல் வெட்கி தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எங்களால் திருப்திகரமான பணி செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் பணியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சியருக்கு 9 பேரும் தனித்தனியாக வாட்சப் மூலம் அனுப்பியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


