சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் நரையன்குடியிருப்பு அணி முதல் பரிசை வென்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பில் திருதமிழ் அறக்கட்டளை, தட்டார்மடம் காவல்துறை ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில் நரையன்குடியிருப்பு, முதலூர் ஓய்எம்சிஏ அணி, காயல்பட்டினம், கொம்மடிக்கோட்டை, கொழுந்தட்டு, புதுக்குளம், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணி, திசையன்விளை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
அரை இறுதி போட்டியில் நரையன்குடியிருப்பு, நெல்லை பிரன்ட்ஸ் கிளப், தட்டார்மடம் போலீஸ் அணி, முதலூர் ஓய்எம்சிஏ அணிகள் மோதின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் நரையன்குடியிருப்பு அணியும், நெல்லை பிரண்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் நரையன்குடியிருப்பு அணி வென்று முதல் பரிசான ரூ 30 ஆயிரம் மற்றும் கோப்பை பெற்றது. 2ம் பரிசு பரிசான ரூ 20ஆயிரம் நெல்லை பிரண்ட்ஸ் கிளப் அணிக்கும், 3ம் பரிசான ரூ 10ஆயிரம் முதலூர் ஒய்எம்சிஏஅணிக்கும், 4ஆம் பரிசு தட்டார்மடம் போலீஸ் அணிக்கும் கிடைத்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு திருதமிழ் அறக்கட்டளை நிர்வாகி திபாகரன் தலைமை வகித்தார். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் திருதமிழ் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புசெல்வன், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், தொழிலதிபர் ஜவகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


