முருகனின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். வருடம்தோறும் பொங்கலுக்கு முந்தைய நாட்களில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்கா திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வாகனங்களில் முருகப்பெருமானின் உருவத்தை அலங்கரித்து வாகனத்தில் வைத்துக் கொண்டு அதன் பின்னால் நடைபாதையாக திருச்செந்தூரை நோக்கி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று முன்தினம், நேற்று, இன்று முன்தினம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கிளம்பும் பக்தர்கள் தங்கள் ஊரில் இருந்து பூஜை செய்து பல்வேறு வேண்டுதல்களுடன் கிளம்பி வருகிறார்கள். இதன் காரணமாக திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில பக்தர்கள் வேல் குத்திக் கொண்டும், காவடி எடுத்துக் கொண்டும் பக்தி பரவசத்துடன் படை சூழ திருச்செந்தூரை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர். சில பக்தர்கள் குடும்பத்தோடு தங்களது குழந்தைகளை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு உற்சாகமாக வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூரைச் சேர்ந்த கொம்பையா என்ற ஊனமுற்றவர் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக அவரது குழுவினரோடு கண்களை மூடிக்கொண்டு முருகனை மனமுருகி வணங்கியபடி நடந்து வருகிறார். வாகனங்களில் பக்தி பாடல்களை போட்டுக்கொண்டு உற்சாகமாக வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே பொதுமக்கள் அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
வருடம் தோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


