தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டியில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 120 மாணவ மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கினார்.
அப்போது சிறப்புரை ஆற்றுவதற்காக அவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் வரவேற்றபோது, 2வது காமராஜரே என்று வரவேற்றவுடன் புன்னகையுடன் எழுந்து சிறப்புரையாற்ற வருகை தந்தார். அவர் சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கும் போது அருகில் ஒருவர் சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை எப்பா கொஞ்ச நேரம் உட்காரு, ஒரு பத்து நிமிஷம் பேசி முடிச்சபிறகு போட்டுக்கலாம் என்றார்.
அதன்பின்னர் மாணவ மாணவிகள் மத்தியில் அவர் பேசுகையில்,
கடந்த டிசம்பர் மாதம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சிறப்பாக தமிழக அரசு மழை வெள்ளத்தை கையாண்டது. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாகவே உயிர்பலி குறைக்கப்பட்டது. இல்லையென்றால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டிருக்கும். மேலும் இவ்வளவு பெரிய மழை வெள்ளத்தில் அணைக்கட்டுகள் முதல்வரின் முயற்சியாலும், அதிகாரிகளின் முயற்சியாலும் தான் காப்பாற்றப்பட்டது என்றார். சுதந்திரத்திற்கு முன்னர் பிராமணர்களும் முஸ்லீம்களில் உயர் ஜாதியினர்கள் மட்டும் கல்வி அறிவு பெற்று வந்த நிலையில் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வியை முதலில் தந்தது கிறிஸ்தவ அமைப்புக்கள் தான். அதன்பின்னர், பெரியார், காமராஜர், கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தந்த காலை உணவு திட்டம் வரையிலான திராவிட மாடல் ஆட்சியால் கல்வியில் முன்னேற்றம் கண்ட தமிழகத்தை புதிய கல்வி திட்டத்தின் மூலம் பழைய நிலைக்கு ஒன்றிய அரசு தள்ள நினைக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் நடத்தி முடித்த உலக முதலீட்டார்கள் மாநாட்டில் ஆறு லட்சம் கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் சிலர் கூறுகிறார்கள், குஜராத்தில் 10 லட்சம் கோடி வரை தொழில் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. குஜராத்தில் தொழில் தொடங்குபவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் தொழிற்சாலைகளை அடைத்து விட்டு ஓடிவிடுகிறார்கள். அந்த தொழில் தொடங்குபவர்களுக்கு குஜராத்தில் பிரதமருக்கு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் கடன்கள் அதிக அளவில் தள்ளுபடி செய்யப்படுகிறது. மீண்டும் அவர்களுக்கு கடன்களும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த நிலை தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இல்லை. தமிழ்நாடும் குஜராத்தும் ஒன்றில்லை. இங்கு தான் சரியான முறையில் தொழில்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஆஸ்திரேயா, ஐரோப்பா, அரபு போன்ற வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடுகள் செய்து வருகிறார்கள். இந்தியாவில் பட்டம் படித்த பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் என்றால் தமிழ்நாட்டில் பட்டம் படித்த பெண்கள் படித்துக்கொண்டிருக்கும் பெண்கள் 72 சதவீதம் பேர் என்று பேசினார்.


