பாவம் செய்ததால் பதவியை வேண்டாம் என்று சொன்ன பாரத மண்ணில் தற்பொழுது பாவம் செய்தால் மட்டுமே ஆட்சிக்கே வர முடிகிறது என தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வல்லநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
வல்லநாடு பகுதிகளில் உள்ள கோயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மஸ்ரீ தாமோதர சாஸ்திரிகள் கௌரவத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது நடிகர் டெல்லி கணேஷ் தலைவராகவும், லெட்சுமணன் துணைத் தலைவராகவும், சுப்பிரமணியன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வல்லநாடு ஸ்ரீ ஆழி விளங்கும் சக்ரபாணி பெருமாள் கோயில், ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் ஆகிய கோயில்களில் முழுமையாக திருப்பணிகளை செய்து வருகின்றனர்.
ஸ்ரீ ஆழி விளங்கும் சக்ரபாணி பெருமாள் கோயிலில் மூலவர் சக்ரபாணி பெருமாள் திருமேனி நீலமேகவர்ணராக மூலிகை வர்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் சக்ரபாணி பெருமாள் தாயார்கள் பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் அருள் பாவித்து வருகிறார்.
இக்கோயிலில் ஆழ்வாராதிகள், ராமானுஜர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ மஹாலெட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மார் ஆகியோருக்கு தனி விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலை வழிப்பட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் புணரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபா ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பிப். 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர், பல்வேறு கோயில் திருப்பணிகளை செய்து வரும் ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபாவின் 10ம் ஆண்டு விழா ஸ்ரீ ஆழி விளங்கும் சக்ரபாணி பெருமாள் கோயிலில் திங்கள் கிழமை நடைபெற்றது.
ஆண்டு விழாவினை முன்னிட்டு திங்கள் கிழமை காலையில் ஸ்ரீ ஆழி விளங்கும் சக்ரபாணி பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சணம், அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.
மாலையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபா துணைத் தலைவர் லெட்சுமணன் வரவேற்றார். மூத்த உறுப்பினர் பாலசுந்தரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் வாழ்த்திப் பேசுகையில்,
சிதிலமடைந்துள்ள கோயில்களை புதுப்பிக்கும் பணி என்பது புத்துணர்வு தரும் பணியாகும். ஸ்ரீ ஆழி விளங்கும் சக்ரபாணி பெருமாள் கோயில் திருப்பணிகளில் மாற்று மதத்தினர்களும் பங்கேற்றனர் என்பது இந்திய ஒருமை பாட்டை காட்டுவதாகும். பணி ஓய்வு பெற்ற பின்னர், ஏதேனும் ஒரு கிராமங்களின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அளிக்க வேண்டும். என்றார் அவர்.
இதனை தொடர்ந்து, தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது,
கடவுள் அருள் இல்லை என்றால் இறைவனை வணங்க முடியாது. அவனது அருள் இருந்தால் வெற்றிகள் தேடிவரும். மஹாபாரத்தில் போர் முடிவுற்ற பின்னர், தர்மபுத்தரன் போரில் உயிர்களை பல கொண்டு பாவம் பல செய்ததால் அரசப் பதவியை ஏற்க முடியாது என கிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
பாவம் செய்ததால் பதவியை வேண்டாம் என்று சொன்ன பாரத மண்ணில் தற்பொழுது பாவம் செய்தால் மட்டுமே ஆட்சிக்கே வர முடிகிறது.
சத்தியம் என்பது பல சூட்சமங்களை கொண்டது. அதை புரிந்து கொள்ள ஞானம் வேண்டும். சத்தியத்திற்கு இயற்கை கட்டுப்படும். ஆனால், மனிதன் சத்தியத்திற்கு கட்டுப்படுவதில்லை.
சிறு சிறு விசயங்கள் கூட பெரிய விசயங்களை தகர்க்கும் தன்மை கொண்டது. வலிமையானதை வலிமையற்றவைகள் ஜெயிக்கும் காலம் வரும். ஒன்றின் முடிவில் மற்றொன்றின் ஆரம்பம் உள்ளது என பல்வேறு கருத்துக்களை நமது இதிகாசங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன.
பெரிய மனிதர்களிடத்தில் நல்ல விசயங்களை கலந்தாலோசித்து நற்பணிகளை ஆற்ற வேண்டும். ஆனால் தற்பொழுது வீடுகளில் கூட பெரியவர்களை வைத்துக்கொள்வதில்லை. சொந்த ஊர்களில் நடைபெறும் ஆலய திருப்பணிகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.
அத்தகைய பணிகளை ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபா செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. என்றார் அவர்.
ஸ்ரீசக்ரபணி கைங்கர்ய சபா செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


