நீர் நிலைகளை பராமரித்தால் நமக்கு நற்பலன் கிட்டும் என மானூர் குள பராமரிப்பை மேற்கோள் காட்டி கல்லூரி மாணவிகளிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பெண்களுக்கான நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மானூர் அருகில் உள்ள அயூப்கான்புரத்தில் நடந்தது. இந்த முகாமில் சமூக சேவை மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் 7 நாள் நட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில் 80 க்கு மேற்பட்ட மாணவிகள் தங்கி சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடக்க விழா அயூப்கான்புரம் அரசு பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் செய்யது முகம்மது காஜா தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட மானூர் பெரியகுளம் பாசன நில விவசாயிகள் நலசங்க தலைவர் முகம்து இபராகிம், மாவடி ஊராட்சி மன்ற தலைவர் தன்சில்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் யாஸ்மீன் கதீஜா வரவேற்றார். திட்ட அலுவலர் செய்யஅலி பாத்திமா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவங்கி வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். அவர் பேசும் போது நீர் நிலைகளை பராமரித்தால் நமக்கு நற்பலன் கிட்டும் என்பதற்கு உதாரணம் மானூர்குளம். இந்த குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு மிகவும் வறண்டு காணப்பட்டது. முன்னாள் அண்ணா பல்கலைகழக டீன் சக்தி நாதன் மற்றும் மாணவர்கள், மானூர் சங்கத்தினை சேர்ந்தவர்கள் முயற்சி எடுத்து குற்றாலத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் கால்வாயை தூர் வாரி சுத்தப்படுத்தி, மானூர் குளத்துக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். எனவே தான் தற்போது மானூர் சுற்று பகுதியில் நிலத்தடி நீர் சீராகஉள்ளது. இதுபோலவே எல்லா பகுதியிலும் நீர் நிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கல்லூரி மாணவிகளான நீங்கள் முன்னிலையில் நிற்க வேண்டும். மற்றவர்களுக்கு நீர் நிலை பராமரிப்பு பற்றி எடுத்துரைக்க வேண்டும். என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆங்கில துறை அப்துல் அனீபா, வணிக மேலாண்மை துறை முகம்மது மீரான், ராஜா கல்லூரி முனைவர் முகம்மது அன்சர், நாட்டாமை மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


