இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காண மாணவர்கள் அனைவரும் வரவேண்டும் என பொருநை இலக்கிய திருவிழா கருத்தரங்கில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
பொருநை இலக்கிய திருவிழா, இளைஞர் இலக்கிய திருவிழா இரண்டு நாள்காக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பி.பி.எல் திருமண மண்டபத்தில் முதல் நாள் மாலை 3.30 மணிக்கு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்குக்கு மேலும் சிவசு தலமை வகித்தார். தொல்லியல் பயணம் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். அவர் பேசும் போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்துள்ளது. இந்த மியூசியத்தினை உலக நாடுகளில் இருந்து மாணவமாணவிகள் வந்து பார்த்து ரசித்து பதிவிட்டும் வருகின்றனர். ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ மாணவிகள் அதிகமாக வந்து பார்வையிடுவது இல்லை. எனவே கீழடிக்கு முந்தைய நாகரீகமாக ஆதிச்சநல்லூர் சைட் மியுசியத்தினை ஒவ்வொருவரும் பார்வையிட வேண்டும். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ரெட்டியார் பட்டியில் மாநில அரசு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்றுதொல்லியல் களத்தில் எடுத்த பொருள்களை காட்சி படுத்த உள்ளனர். அதையும் மாணவர்கள் பார்வையிட வேண்டும். என்று பேசினார்.
இந்த கருத்தரங்களில் புனைவும் வாசிப்பும் என்ற தலைப்பில் கவிஞர் மண் குதிரையும், ஊடக இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் ஈஸ்வர மூர்த்தியும், தமிழ் கவிதை உலகம் என்ற தலைப்பில் கவிஞர் பக்ரூதீனும் பேசினார்கள். காப்பாட்சியர் சிவசக்திவள்ளி சிறப்பு பேச்சாளர்களை கௌரவப்படுத்தினார். பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாமா, பட்டி மன்ற பேச்சாளர் புத்தனேரி செல்லப்பா, சாரள் டக்கர் பி.எட். கல்லூர் முதல்வர் ஜெயமேரி, கவிஞர் பேரரசி இலக்கியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோமதி கிருஷ்ண மூர்த்தி, தூய தமிழ் பற்றாளர் சிவசெல்வ மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.


