தாமிரபரணி ஆற்றில் இருந்து தூத்துக்குடி குடிதண்ணீருக்கு செல்லும் பைப் லைன் தெய்வச்செயல்புரம் அருகே உடைப்பு ஏற்ப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் குடிதண்ணீர் தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் கொண்டு செல்ல அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. வல்லநாடு அருகே உள்ள அகரம் தாமிரபரணி ஆற்றில் இருந்து மூன்று பைப் லைன் திட்டம்போடப்பட்டு அதன் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அது போதுமானது அல்ல என்று கலியாவூரில் நான்காவது பைப் லைன் அமைக்கப்பட்டது. ஆனாலும் கூட தூத்துக்குடியில் குடிதண்ணீர் தட்டு பாடு தலைவிரித்தாடுகிறது. இதற்கிடையில் முதல் மூன்று பைப் லைனையும் இணைத்து வல்லநாடு மலையில் தனியாக ஒரு நீர் உந்து நிலையம் அமைத்து அதன் மூலம் குடிதண்ணீர் வழங்கி வருகிறார்கள்.
தெய்வச்செயல்புரம் அருகே தனியார் செங்கல் சூளை அருகில் இந்த பைப் லைன் உடைந்து விட்டது. இந்த தண்ணீர் குடியிருப்புக்குள் வெள்ளம் போல் செல்கிறது. பைப் லைன் மூலமாக நீரேற்றும்போது மிக அதிகமான தண்ணீர் வந்த வழியாக வீணாகிறது.
ஆனால் இதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்ளவே இல்லை. இதுகுறித்து தெய்வச்செயல்புரத்தினை சேர்ந்த நல்லையா கூறும் போது, குடிதண்ணீர் தட்டுபாடுதூத்துக்குடியில் உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இங்கு மோட்டார் மூலம் நீர் ஏற்றும் போது தண்ணீர் குடியிருப்புக்குள் ஆறு போல வந்து விடுகிறது. கடந்த 10 நாள்களாக இந்த பிரச்சனை உள்ளது . ஆனால் இந்த தண்ணீரை அடைக்க குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தூத்துக்குடி மக்களின் பிரச்சனையை போக்க வீணாக செல்லும் தண்ணீரை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


