திருச்செந்தூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு டிரைவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை ஆர்டிஓ குருசந்திரன் வழங்கினார்.
தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் பிப். 14ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் நடந்தது. தொடர்ந்து பகத்சிங் பஸ் ஸ்டாண்டில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமை வகித்தார்.
டிஎஸ்பி வசந்தராஜ், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கவின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆர்டிஓ குருச்சந்திரன் கலந்து கொண்டு டிரைவர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி, அவர்களுக்கு சாலை விதிகள் அடங்கிய புத்தகம் மற்றும் துண்டு பிரசுரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டிரைவிங் உரிமம் பெற வந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


