செய்துங்கநல்லூரில் உள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தமிழக அரசு இளைஞர் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தி வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை அளித்தும், வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் நேரடி வேலை வாய்ப்பையும் அளித்தும் வருகிறது.
அதன்படி செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட தற்போது முன்னிலையில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 18 வயதுக்கு மேல் 8ம் வகுப்பு தேறியவர்கள் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த தகுந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதில் 1264 பேர் கலந்து கொண்டனர். இதில் 103 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. 68 பேர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அனுமதி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. கருங்குளம் ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி திட்ட அலுவலர் ரேவதி ஆணைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


