தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் கருங்குளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கருங்குளம் மாதாங்கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துக்குமார் என்பதும், அவர் மதுபோதையில் அந்த வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 15 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


