72வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்த தான முகாம் கொங்கராயகுறிச்சி மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ரசீது காமில், மாவட்ட துணைச் செயலாளர் சிக்கத்ந்தர், கிளைத் தலைவர் மிராசி மீரான், ரத்த வங்கி மருத்துவர் சாந்தி, வல்லநாடு அரசு மருத்துவர் ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் கலீல் ரகுமான் வரவேற்றார்.
முகாமில், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ரத்த தானம் செய்தால் உடம்பில் ரத்த அளவு குறைந்து விடும், உடல் எடை குறைந்து விடும் என்பது போன்ற தவறான மூடநம்பிக்கை மக்கள் மனதில் இருந்து மாறவேண்டும்.ரத்த தானம் செய்பவரிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தம் முன்பின் அறியாதவர், முகம் தெரியாதவர் மட்டுமின்றி பகைவரின் உயிரைக்கூட ஆபத்து காலத்தில் காப்பாற்றும் வல்லமை படைத்ததாகும். எப்படியோ ரத்த தானத்தின் மூலமாக ஒருவர் உயிர் பிழைக்கும்போது அவரது குடும்பத்தினரின் வாழ்த்துக்கள் ரத்த தானம் கொடுத்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போய் சேருகிறது. ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்படவேண்டும் என்றார்.
இதில், கொங்கராயகுறிச்சி கிளைப்பொருளாளர் மன்சூர், துணைச் செயலாளர் முஜீப், துணைத்தலைவர் இஸ்மாயில், மருத்துவர் அணி செயலாளர் பாதுஷா, வல்லநாடு சுகாதார ஆய்வாளர் ஸ்ரீவைகுண்டத்தான் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவப்பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாணவர் அணி செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.


