
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் புதிய பாலத்திற்கு கீழ் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமரங்கள் அகற்றும் பணியை வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாமிரவருணி ஆறு, பாசனக் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள், கருவேலமரங்கள், அமலைச் செடிகள் மற்றும் மணல் திட்டுகளை அகற்றி அழகு படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் அவைகளை பாதுகாத்து அழகுப்படுத்திடும் பணிகளையும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை சார்-ஆட்சியர் பிரசாந்த் ஆலோசனைகளின்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையிலான வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுப்பாலத்துக்கு கீழ்பகுதியில் இருந்து புன்னக்காயல் வரையுள்ள ஆற்றுப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்றும் முதற்கட்டப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆற்றில் கருவேலமரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் முள்களையும் வேர்பகுதிகளையும் மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனத்தினர் அகற்றி வருகின்றனர்.
இப்பணிகளை வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மணிமொழியன் ரெங்கசாமி, வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.