தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை கடனாக வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இறந்ததை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வங்கியில் திருட முயற்சித்துள்ளனர். வங்கியின் கீழ்பகுதியில் உள்ள ஜன்னல் பகுதியை உடைத்துள்ளனர். முடியாத காரணத்தால் வாசலில் உள்ள 3 பூட்டை பிளேடு மூலம் அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாத காரணத்தால் திரும்பிச் சென்று விட்டனர். இதனால் 200க்கும் மேற்பட்டோர் வைத்திருந்த 7 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் உள்ளே வைத்திருந்த 3 லட்சம் ரொக்கம் தப்பியது.
இந்நிலையில் வங்கியின் காவலாளியான அதே பகுதியைச் சேர்ந்த கோபால கணேசன் வங்கியின் மாடியில் அயர்ந்து தூங்கி விட்டார். இந்நிலையில் அதிகாலை வங்கியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாலையில் வங்கியில் வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஜியா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


