ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத பிரேத பரிசோதனை அறுவை மையம் இடத்தை மாற்றி நவீன முறையில் கட்டடம் கட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான சித்திரை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருளிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது…: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான பிணங்களை பரிசோதனை செய்யும் ”பிரேத பரிசோதனை அறுவை மையம்” தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்திற்கு செல்லும் வழியில் உள்ளது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 25வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளும் இல்லை. இதனால் பிரேதங்களை பரிசோதனை செய்யும்நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த அறுவை மையம் புதிய ஆற்றுப்பாலத்திற்கு செல்லும் வழியில் இருப்பதால் பிணங்களை பரிசோதனை செய்யும்நேரங்களில் இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும், இந்த பிரேத பரிசோதனை மையம் அருகே காலியாகவுள்ள இடத்தில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்கா தனியார்களின் பங்களிப்புடன் வருவாய்த்துறையின் முயற்சியால் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது. எனவே பழுதானதுடன், போக்குவரத்திற்கும் இடையூறாகவுள்ள பிரேத பரிசோதனை அறுவை மைய கட்டிடத்தை வேறுபகுதிக்கு மாற்றவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.