
தாமிரபரணி ஆற்றில் பாசன வசதிக்காக 8 அணைக்கட்டுகளும் 11 வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 அணைக்கட்டுகள், 7 வாய்க்கால்கள் நெல்லை மாவட்டத்திலும், 2 அணைக்கட்டுகள், 4 வாய்க்கால்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன.
இவற்றில் தென்திருப்பேரை கடம்பாகுளம் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 1853-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையை கட்ட ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளனர். இதையடுத்து 1869-ம் ஆண்டுதொடங்கப்பட்ட அணை கட்டுமான பணி 1873-ம் ஆண்டு முடிவடைந்துள்ளது. இந்த அணையை கட்ட அக்கால மதிப்பில் 17 லட்சத்து 75ஆயிரத்து 63 ரூபாய் செலவாகியுள்ளது.
இடைப்பட்ட காலத்தில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அணைக்கட்டும் பணி தடைப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் ஒன்றிணைந்து பணம் வசூலித்து அணையை கட்டி முடிக்க கொடுத்துள்ளனர். அப்போது கலெக்டராக இருந்த பக்கிள் துரையின் பெரும் முயற்சியால் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கால கட்டத்தில் வாழ்ந்த விவசாயிகளில் பலர் தங்களது குழந்தைகளுக்கு பக்கிள் என பெயரிட்டு அவருக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தென்கால் மூலம் நேரடி பாசனமாக 2693 ஏக்கர், குளத்துப் பாசனத்தில் 10067 ஏக்கர் என மொத்தம் 12760 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதைபோல் வடகால் மூலம் 3289 ஏக்கர் குளத்து பாசனமாக 9511 ஏக்கர் என மொத்தம் 12800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் நெல்லை மாவட்டத்தில் அதிகம் இருந்தாலும் பாசன வசதி பெறும் நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் வாய்க்கால்கள் மூலம் 40ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகள் மூலம் 46107ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
2 மாவட்ட விவசாயிகளை வளம் பெற செய்த தாமிரபரணி பாசனத்தை பொறுத்தவரையில் கார், பிசானம் என 2 போக நெல் சாகுபடிகளை செய்து வந்தனர். இது தவிர ஏப்ரல், மே காலங்களில் தண்ணீர் இருப்பை பொறுத்து முன்கார் சாகுபடி என்ற சிறப்பு அனுமதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் ஆறுமுகமங்களம் பகுதி விவசாயிகளுக்கும், தென்கால் பாசனத்தில் ஆத்தூர் பகுதி விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் பல்வேறு வறட்சியான கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான உறைகிணறுகள் பல உள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததும், விவசாயிகளுக்காக விவசாயிகளிடம் இருந்த பணம் வசூல் செய்து கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணையை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காமல் தற்போது அணையில் விரிசல் ஏற்பட்டு வீணாக பல்லாயிரக்கணக்கான தண்ணீர் கடலுக்கு செல்கிறது. அணையின் கீழ்பகுதியில் கரைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தென்கால் தூர்வாரும் பணியிலும், 2015-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் நடைபெற்ற தூர்வாரும் பணியிலும் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்றது.
அணையை தூர்வார நிதி ஒதுக்கப்பட்ட போதே அணையில் உள்ள விரிசல்களை சரிசெய்யவும் திட்டமிடப்பட்டது. ஆனால் மணல் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணி நடைபெற்றதால் அணையில் ஏற்பட்டுள்ள விரிசல் சரி செய்யப்படவில்லை. அதனால் தற்போது அணையில் விரிசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நேரடியாக ராட்சத இயந்திரங்கள் மூலம் 20 எம்ஜிடி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதிலும், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் கார், பிசானம், முன்கார் சாகுபடி செய்து வந்த தாமிரபரணி பாசன விவசாயிகள் தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போகத்திற்கே போராடி தான் தண்ணீர் பெற வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று பாசன குளங்களையும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைகளையும் கலெக்டர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளிலும் அதன் பாசன குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அழகுப்படுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமையிலான வருவாய் துறையினர் செய்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது பாசன குளங்களில் தண்ணீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு பெரும்பாலான குளங்களில் இருப்பு உள்ளது. ஆனால் அணைகள் மற்றும் பாசன குளங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொதுப் பணித்துறையினர்களின் அலட்சியப் போக்கால் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு எவ்வித பயனும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
அணை மற்றும் பாசன குளங்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் வருவாய்துறையினருடன் இணைந்து தங்களது பங்களிப்பை பொதுப்பணித்துறையினர் இதுவரை செய்ததில்லை. ஆனால் மணல் குவாரி அமைக்கும் பணி, விவசாயிகளை புறக்கணித்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் பணி, தூர்வாரும் பணி என்ற பெயரில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு துணை போவதற்கும் பணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறையினர் எவ்வித தயக்கமும் இன்றி முன்னின்று செய்வார்கள் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பு இன்றி ஸ்ரீவைகுண்டம் அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் சேதடைந்துள்ளதாலும் அணையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அணையின் கல்தூண்களிலும் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்திலும் அரச மர செடிகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைக்கும் பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலை நிலவுகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளும் வியாபாரிகள் சங்கத்தினர்களும் பலமுறை பொதுப் பணித்துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெயிலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் விரிசல்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று வருவது விவசாயிகளையும் பொது மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.