ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் அமலைச் செடிகளை அகற்றும் பணியினை ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியராக பணியாற்றி பணி மாறுதலில் செல்ல உள்ள வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் துவக்கி வைத்தார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் மூலமே குடிநீர். பாசன தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை நம்பியே இரு மாவட்டத்திலும் விவசாயப் பணிகள் தொடங்குவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் பாசனத்தை நம்பி 25 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து வரும்போது மேற்பகுதியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளும் ஆற்றுத்தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. இந்த அமலைச்செடிகள் எல்லாம் தற்போது தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நீண்ட தூரத்திற்கு பசுமை போர்த்திய வயல்வெளி போன்று தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் இருப்பதே தெரியாமல் வெறும் அமலைச் செடிகளால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. அமலைச்செடிகள் தண்ணீரை அதிகப்படியாக உறிஞ்சி உயிரோட்டமாக வாழ்வதால் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது.
அணையின் முகத்துவாரத்தில் அவ்வப்போது தேங்கும் அமலைச் செடிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் வருவாய்த்துறையினர் தொடர்ந்து அகற்றி வந்தனர். இருந்த போதும் அமலைச்செடிகள் மீண்டும் மீண்டும் வந்து அணை முழுவதும் தேங்கியது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியராக பணியாற்றிய தாமஸ் பயஸ் அருள் தற்போது ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாறுதலாக செல்ல உள்ளார். அவர் இருந்த காலங்களில் அவரின் தலைமையில் அணைக்கட்டுப்பகுதியில் அடிக்கடி தேங்கும் அமலைச்செடிகளை அகற்றும் பணி நடந்தது. அதே போல் அவர் செல்லும் கடைசி நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியுள்ள அமலைச்செடிகளை அகற்றும் பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாச்சியரை பாராட்டும் விதமாக பொதுமக்கள் அணைப்பகுதியில் வைத்து அவரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இந்ந நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த அமலைச்செடிகள் அகற்றும் பணியில் ஆழ்வார்தோப்பு கிராம உதயம், ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் மற்றும் வருவாயத்துறையினர், பொதுப்பணித்துறையினர் பங்களிப்புடன் நடந்தது.
===