தாமிரபரணி நதி வற்றாத ஜுவநதி. மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகையில் உற்பத்தியாகி, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினை வளமாக்கும் புண்ணிய நதி. இந்நதியில் வருடத்தின் 365 நாளும் வற்றாமல் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. மின்சாரம் உற்பத்தி, விவசாயம், தொழிற்சாலை, குடிதண்ணீர் திட்டம் என நதியின் ஒவ்வொரு துளியும் மக்களுக்காவே பயன்பட்டு வருகிறது. இந்த நதியில் சுற்றுலாவிற்கென பல அம்சங்கள் இருந்தும் கூட சிறிது காலமாக வனத்துறையின் கட்டுபாடு காரணமாக பாணதீர்த்தம், மேலணை பகுதிகளில் படகு சவாரி போன்றவை தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டனர். எனவே இந்த நதியில் சுற்றுலாவிற்கென இருந்த அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்டது.
தாமிரபரணி ஆறு பாபநாச அணைப்பகுதியில் இருந்து ஆற்றின் குறுக்கே 8 அணைக்கட்டுகள் 11 கால்வாய்கள் மூலமாக சுமார் 88 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதற்காக கட்டபட்ட தடுப்பணைகள் அனைத்துமே சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்றதாகவே உள்ளது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் அணையை தவிர மற்ற அணைகள் தூர்ந்து கிடக்கிறது.
ஆங்கிலேயர்களால் 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தூர்ந்து கிடந்தது. தற்போது பசுமை தீர்பாயம் மூலமாக இந்த அணை தூர் வாரப்பட்டு விட்டது. எனவே சுமார் 8 அடி தண்ணீர் ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள முருகன் கோயில் படித்துறை வரை படகு சவாரி அமைத்து, சுற்றுபுறத்தில் வனத்துறை மூலமாக பராமரிக்கப்படும் மரங்களில் அபூர்வ பறவைகள் வளர்த்தால் பொதுமக்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். மேலும் நவதிருப்பதிகளுக்கு வந்து செல்லும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் ஆதிச்சநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் புகழை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தினை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் படகு போக்குவரத்து அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சீனிவாசன், உதவி சுற்றுலாத்துறை அலுவலர் கோவிந்தராஜன், போக்குவரத்து துறை கோட்ட மேலாளர் சமுத்திரம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் இடங்களை சுட்டிக் காட்டினார். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி, பேருந்து நிலையத்தின் பின்புறம் ஆற்றுப்பகுதி, பிச்சன்னா தோப்பு ஆற்றுப்பகுதி மற்றும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் இந்த பகுதியில் ஒரு சிறிய படகு மூலம் பயணம் செய்து ஆய்வு செய்யப்பட்டு பின்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.