
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தான் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் சந்திப்பு அருகே பிரதான சாலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சரி செய்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் இரண்டு மாதத்திற்கு முன்பு சாலையை தோண்டி உடைப்பு சரி செய்து பின்னர் அந்த பெரிய குழிகளில் மண்ணை மட்டும் போட்டு மூடிவிட்டனர்.
இந்நிலையில் சாலை மீண்டும் குழி ஏற்பட்டதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தரம் குறைவாகவே அமைக்கப்பட்டது. மேலும் தார் கலவையை அழுத்துவதற்கு கனரக வாகனத்தை பயன்படுத்தி சாலையை செப்பனிட வேண்டும். ஆனால் தார் கலவை கொண்டு வந்த காலியான வெற்று லாரியை கொண்டு சாலையில் கொட்டப்பட்ட தார் கலவை மீது உருட்டினர். இதனால் சாலை முழுமையாக செப்பனிடப்படவில்லை.
இந்நிலையில் தேரோட்டத்தின் போது அந்த வழியாக தேர் செல்லும் என்பதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை மீண்டும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.