ஸ்ரீவைகுண்டத்தில் கோழி கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஒப்படைத்தார். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றுக்கு கீழ் பகுதி கரையோரத்தில் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றை அழகுப்படுத்தும் திட்டத்தை கலெக்டர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு தொடங்கி வைத்த பொழுது, கரையோரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை பின்னர், பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் கொட்டப்பட்டு மக்கும் குப்பைகளாகவும் மக்காத குப்பைகளாகவும் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் குப்பைகளை கொட்டக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுக் கரையோரத்தில் கோழிக்கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்வதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, பேரூராட்சி பணியாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை கொட்டப்படுவது குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடியில் இருந்து கோழி கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மணிமொழியன் ரெங்கசாமி பறிமுதல் செய்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்&இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் ஆகியோர் விரைந்து வந்து கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோழி கழிவு பார்வையிட்ட தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், அக்கழிவுகளை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குழி தோண்டி புதைத்திட வேண்டும் என்றார்.
இதைதொடர்ந்து, கோழி கழிவுகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டது. மேலும், கோழிக்கழிவுகளை கொட்ட வந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மணிமொழியன் ரெங்கசாமி கூறியதாவது,
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து குப்பைகளை தெருக்களில் கொட்டினாலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கோழிக் கழிவுகளை கொண்டு வந்து ஸ்ரீவைகுண்டத்தில் கொட்டியதாலும் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழக் கூடாது என்பதாலும் அதிகப்பட்ச தொகையாக ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.