வெள்ளூர் சிவன் கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் சிவகாமி அம்மாள் உடனுறை நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
நாள்தோறும் சுவாமி, அம்பாள் காமதேனு, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். தினமும் சிறப்புஅபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன.
சனிக்கிழமை தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், கோயில் தக்கார் அஜீத், செயல் அலுவலர் விஸ்வநாத், விழா ஒருங்கிணைப்பாளர் மாசானமுத்து, விவசாய சங்கத் தலைவர் அலங்காரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.