வல்லநாடு முதல் கலியாவூர் வரையிலான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு முதல் கலியாவூர் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையானது பாறைக்காடு, சேதுராமலிங்கபுரம், நாணல்காடு,காலாங்கரை போன்ற கிராமங்களை இணைக்கிறது. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த சாலையினையே பயன்படுத்துகின்றனர். பழுதடைந்த சாலையில் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் நிகழ நேரிடுகிறது.
மேலும் உழக்குடி, கலியாவூர், காலாங்கரை, நாணல்காடு போன்ற கிராமங்களில் மருத்துவமனை வசதி இல்லாத காரணத்தினால் அவசரகால நிலையில் நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்ல இந்த சாலையினையே பயன்படுத்தும் நிலை உள்ளது. உடனடியாக மக்கள் பயன்பெறும் விதமாக இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கலியாவூர் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரமசிவம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.