வல்லநாடு அருகே 5 வருடகாலமாக உடைந்து கிடக்கும் பாலத்தினை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி&திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே அமைந்துள்ளது அகரம் என்கிற கிராமம். இந்த கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. விருதுநகர் மாவட்டத்துக்கு இங்கிருந்துதான் குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடி பகுதிக்கு குடிதண்ணீருக்காக பைப் லைன் செல்கிறது.
இதனால் அடிக்கடி இந்த கிராமத்துக்கு வெளியூரில் இருந்து அதிகாரிகள் வருவது வழக்கமாக உள்ளது. இவ்வூருக்கு இரண்டு வழி உண்டு.-. நான்கு வழிச்சாலை பாதை அமைக்கப்பட்ட போது தூத்துக்குடி மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் வரும் சாலை துண்டிக்கப்பட்டது.
ஆகவே மக்கள் வல்லநாடு கிராமத்தில் இருந்து அகரம் செல்வதற்குள்ள சாலையை பயன்படுத்தி வந்தார்கள். இதற்கும் சோதனை வந்தது. மருதூர் கீழக்காலில் அமைந்துள்ள பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து விட்டது. இந்த பாலத்தினை சீர்செய்ய வேண்டும் என்று அகரம் மக்கள் போராடி வந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாலம் கைபிடி சுவர் உடைந்து, தூணில் விரிசல் ஏற்பட்டு பாலம் உபயோக படுத்தாத நிலைக்கு சென்று விட்டது. லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு வந்தபோது பாலத்தின் தென்பகுதி உடைந்து லாரி வாய்க்காலில் பாய்ந்தது. இதில் லாரி டிரைவர் காயத்துடன் தப்பித்தார். தற்போது இந்த பாலம் வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் அகரம் கிராமம் தீவு போல ஆகி விட்டது. வயற்காடுகள் அறுவடை செய்யஅறுவடை இயந்திரம் கொண்டு வர முடியாத நிலையில் உள்ளனர். அதுபோல பிசான சாகுபடி செய்ய இடுபொருள்களையும் இங்கு கொண்டு வர முடியவில்லை இதனால் இவ்வூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பசுமை தமிழ் தலைமுறை தலைவர் சுதன் கிறிஸ்டோபர் கூறும் போது, அகரம் கிராமத்துக்கு அடிப்படை வசதியான சாலை வசதியை செய்ய அரசு மறுத்து வருகிறது. தூத்துக்குடி பைப்லைன், அருப்புகோட்டை பைப்லைனை பார்வையிட மாவட்ட கலெக்டர், உள்பட பலர் வந்து செல்கின்றனர். ஆனால் துண்டிக்கப்பட்ட பாலத்தினை சீர் செய்யயாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மிகவும் ஒதுக்கப்பட்ட கிராமாக இவ்வூர் ஆகி விட்டது. தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர திருவிழா அக்டோபர் மாதம் வருகிறது. அகரம் தாமிரபரணி ஆற்றில்தான் தசவதார தீர்த்தக்கட்டம் என்னும் அபூர்வ தீர்த்தக்கட்டம் உள்ளது. இங்கு ஸ்நானம் செய்ய சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த பகுதியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்குள் இந்த பாலத்தினை சீர் செய்து தரவேண்டும் என அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டத்துக்கு குடிதண்ணீர் தரக்கூடிய மிக அதிகமான நீர் ஊறிஞ்சும் கிணறு அகரம் பகுதியில்தான் உள்ளது. எனவே அதிகாரிகள் அடிக்கடி இங்கு வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த பாலத்தின் வழியாக வராமல் மாற்று பாதையில் மண்தடம் வழியாக ஊருக்குள் செல்கிறார்கள். மழை காலம் வந்து விட்டால் அவர்கள் கூட ஊருக்குள் நுழைய முடியாது. எனவே உடனடியாக இந்த பாலத்தினை சீர் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.