தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரத்தைச் சேர்ந்தவர் கிளாட்வின் (32). இவர் சிங்கப்பூர் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெபசெல்வி (27). இவர்களுடைய மகன் ஜெபினுக்கு (2) நேற்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் ஜெபசெல்வி, அதே ஊரில் வசிக்கும் தன்னுடைய தந்தை நவமணியை (70) அழைத்து கொண்டு, சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையுடன் மொபட்டில் புறப்பட்டு சென்றார். நவமணி மொபட்டை ஓட்டிச் சென்றார்.
சாத்தான்குளம் யூனியன் அலுவலகம் அருகில் பண்டாரபுரம் விலக்கு அருகில் சென்றபோது, சாத்தான்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கார் திடீரென்று மொபட்டின் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெபசெல்வி, ஜெபின் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த ஜெபசெல்வி, ஜெபின் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெபினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் இறந்த நவமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் மகளுடன் இறந்த நவமணி விவசாயி ஆவார். இவர் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். கார் மோதிய விபத்தில் மகளுடன் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
சாத்தான்குளம்–இட்டமொழி ரோட்டில் யூனியன் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் அருகில் பண்டாரபுரம் செல்லும் சாலை மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு வாகனங்கள் வேகமாக வரும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. யூனியன் அலுவலகம் எதிரில் காரியாண்டி செல்லும் சாலை செல்கிறது. எனவே அங்கு வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.