முறப்பநாட்டில் 45 லட்சம் செலவில் படித்துறை அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் கிடைத்த காரணத்தினால் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கரம் விழா நடைபெற உள்ளது. இதற்காக வருகிற 12 ந்தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி மிக முக்கிய தீர்த்தக்கட்டமாக விளங்கிறது. தெட்சனகாசி என்றும் நவகைலாயங்களில் நடுக்கைலாயம் எனவும் வழங்கப்படுவதாலும், குரு ஸ்தலமாக போற்றப்படும் இந்த இடத்தில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் முறப்பநாடு குரு ஸ்தலத்தில் நீராடுவார்கள் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதன் காரணமாக இங்கு 45 லட்ச ரூபாய் செலவில் அடிப்படை வசதிக்கான பணிகள் துவங்கியுள்ளது. சுமார் 40 லட்சம் செலவில் கைலாசநாதர் ஆலயத்தில் இருந்து ஆற்று வரை சிமெண்ட சாலை அமைத்தல், இரண்டு புறமும் பிளேவர் கல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் 5 லட்ச ரூபாயில் தற்காலிக கழிவறை, உடைமாற்றும் அறை, மின் விளக்கு அமைத்தல் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை அமைச்சர் கடம்பூர் ராஜீ வந்து பார்வையிட்டு முடுக்கி விட்டுள்ளார். மாவட்ட ஆட்சி தலைவர் நந்தூரி சந்தீப், மாவட்ட காவல்துறை ஆணையாளர் முரளி ரம்பா ஆகியோரும் பார்வையிட்டனர். இதற்கான பணியினை கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் தலைமையிலான குழு மிகச்சிறப்பாக செய்து வருகிறது. பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் தலைமையில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலிசார் செய்து வருகின்றனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலையில் மத்திய பகுதியில் முறப்பநாடு இருப்பதாலும் குரு ஸ்தலமாக விளங்குவதாலும் மிக அதிகமான மக்கள் கூட்டம் இங்கே கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் அனைத்தையும் நாலு வழிச்சாலையில் நிறுத்தி விட்டு மக்கள் மட்டுமே நீராட செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் குறைந்த கட்டணத்தில் நீராடும் இடத்துக்கு மக்களை அழைத்து செல்ல ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. நீராடும் பகுதியில் தடுப்பு வலை, படகு மூலம் கண்காணிப்பு என விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் 12 நாள்களும் சிறப்பு யாகம் நடைபெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இங்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஸ்நானம் செய்ய வருவார்கள் என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


