மராமத்து பணியால் உடையும் தருவாயில் முத்தாலங்குறிச்சி குளத்தில் பெருகிய தண்ணீர் ஆற்றுக்குள் மீண்டும் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி நதியில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டில் மருதூர் மேலக்கால் உள்ளது. இந்த கால்வாயில் முதல் குளம் முத்தாலங்குறிச்சி குளம். இந்த குளத்துக்கு தண்ணீர் தரும் முக்கவர் சாணல் மூலமாகவும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இக்கால்வாயில் முத்தாலங்குறிச்சி குளத்துக்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் முக்கவர் சானல் செல்கிறது. இந்த சாணலிலும் இந்த சானலும் தூர்ந்து போய் கிடந்தது. எனவே முக்கவர் சானலை கான்கிரிட் அமைக்கவும், மருதூர் மேலக்காலில் உள்ள 16 குளங்களில் உள்ள மடைகளை சீரமைக்கவும் உலக வங்கி திட்டம் 10 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை திட்டங்கள் வட்டத்தின் சிறப்பு திட்டம் நான்குனேரி கோட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முதல் கட்ட பணியை பொதுப்பணி துறையினர் துவங்கியுள்ளனர். சுமார் 2 கோடி ரூபாய் செலவில் முக்கவரில் இருபுறமும் கான்கிரிட் சுவர் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக வல்லநாடு அருகே உள்ள பக்கபட்டி முக்கவர் சானலில் பொக்கலின் இயந்திரம் மூலம் தூர் வார கடந்த மே மாதம் 17 ந்தேதி துவங்கினர். இந்த பணியில் மிகவும் குறுகலாக உள்ளது. இதுபோன்று கால்வாய் அமைத்தால் முத்தாலங்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராது என விவசாயசங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் வேலையை முற்றுகையிட்டனர்.
ஆகவே அந்த பணியை பொதுப்பணித்துறையினர் பாதியிலேயே விட்டு விட்டனர். ஆனால் முத்தாலங்குறிச்சி குளத்தினை கரைகளை மேம்படுத்தி அதில் உள்ள பாசன மடைகளான சேரி மடை , புது மடை மற்றும் வடிகால் மடையை சீரமைத்தனர். ஆனால் இந்த மூன்று மடையிலும் ஷட்டர் அமைக்காமல் விட்டுவிட்டனர். தற்போது பெய்த மழையின் காரணமாக முக்கவர் சாணல் வழியாக முத்தாலங்குறிச்சி குளம் நிரம்பி விட்டது. ஆனால் ஷட்டர் இல்லாத காரணத்தினால் தண்ணீர் அணைத்தும் வடிகால் மடை வழியாக வீணாக வெளி செல்கிறது. அதை மண்மூட்டை வைத்து அடைத்து வைத்தார்கள். அதையும் மீறி வடிகால் உடையும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து முத்தாலங்குறிச்சி முன்னாள் துணை தலைவர் நடராஜன் கூறும்போது, வடிகால் மடை அமைத்தவுடன் ஷட்டர் அமைத்து இருக்க வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறையின் அலட்சிய போக்கால் தற்போது ஷட்டர் இல்லாமல் குளத்தில் தேக்கி வைத்த தண்ணீர் முழுவதும் ஆற்றுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பாசனத்துக்கு செல்லும் மடையையும் மணல் மூட்டை வைத்து அடைத்து வைத்திருக்கிறார்கள். அதன் வழியாக எப்படி தண்ணீர் திறந்து பாசனம் செய்யப்போகிறோமோ தெரியவில்லை. எப்போதுமே முத்தாலங்குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வருவது அபூர்வம் ஆனால் தற்போது தண்ணீர் நிறைந்தும் குளத்து தண்ணீரை வீணாக பறி கொடுத்து விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கனவே 10 நாள் மழை பெய்தால் கூட தாமிரபரணி பாசனத்தில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்பி விடலாம் . ஆனால் கடந்த 20 நாளுக்கு முன்பு வந்த தாமிர பரணி வெள்ளத்தினை கடலுக்கு அனுப்பி வேடிக்கை பார்த்தனர் பொதுப்பணித்துறையினர்.
தற்போது முத்தாலங்குறிச்சி குளத்தில் தண்ணீரை பெருகியுள்ளது. மராமத்து பணி செய்து ஷட்டர் போடாத காரணத்தினால் பெருகி தண்ணீரும் ஆற்றுக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மடைகளுக்கும் ஷட்டர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.