
தூத்துக்குடி அருகே பெண் ஏட்டு பைக் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே தெற்கு காரச்சேரியைச் சேர்ந்தவர்கள் லெட்சுமணப் பெருமாள் (35), சங்கரலிங்கம் (28), இவர்கள் இருவரும் கொத்தனராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 15ம் தேதி இவர்கள் இருவரும் வேலை முடிந்து தட்டப்பாறை விலக்கில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு பைக்கில் வந்த புதுக்கோட்டை தலைமைக் காவலர் ஜெயசுந்தரியின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணப் பெருமாள், சங்கரலிங்கம் ஆகிய இருவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி லெட்சுமணப்பெருமாள் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரலிங்கம் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவ்விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார், பெண் ஏட்டு ஜெயசுந்தரி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.