தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் பிரகாரத்தை வலம் வந்தது. அதன்பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு 11 மணிக்கு உற்சவர் அய்னார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 6ம் நாளான 26ம் தேதி திங்கள் கிழமை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், 10ம் திருவிழாவான 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அய்யனாரை வழிபடுகின்றனர். இரவு 12 மணிக்கு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 1 மணிக்கு உற்சவர் அய்யனார் கற்பகபொன் சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி வீதிகளில் வலம் வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.


