தூத்துக்குடி மாவட்டத்தில் நவத்திருப்பதி ஸ்தலங்கள் மிகவும் பிரச்சித்தி பெற்றவை. நவ திருப்பதிகளில் முதலாவது திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் கண்ணாடி மண்டபத்தில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கள்ளபிரான் வீதியுலா நடந்தது. 9ம் தேதி 5ம் திருவிழாவில் காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான், காய்சினவேந்த பெருமாள், எம்இடர் கடிவான், பொலிந்து நின்றபிரான் ஆதிநாதபெருமாள் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனமும் நடந்தது. இரவு 9 மணிக்கு 4 கருட வாகனத்தில் சுவாமி கள்ளபிரான், பொலிந்து நின்றபிரான், காய்சினவேந்த பெருமாள், ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் குடவறை பெருவாயில் எதிர்சேவை, வீதி புறப்பாடு நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டதையொட்டி சுவாமி கள்ளபிரான் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு திருத்தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா கோஷமிட்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.