சுடலை மாடன் தாமிரபரணி கரையில் மிகச்சிறந்த காவல் தெய்வமாகும். அனேகமாக அனைத்து சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களிலும் சுடலை மாடன் தெற்குப் பார்த்து கையில் அரிவாள் அல்லது பெரிய ஆயுதத்துடன் இருப்பதைக் காணலாம். சுடலை மாடன் சுடலை மாடசாமி என்றும் அழைக்கப்படுகிறார். பெரிய மீசையும் ஆக்ரோஷமான தோற்றமும் சுடலை மாடசாமிக்கே உரியது. பெரும் பாலான இடங்களில் பூட வழிபாடே நிலவுகிறது. சிலைகள் உள்ள கோயில்களில் மட்டும் மேற்கூறிய உருவங்கள் உள்ளன. பேச்சியம் மனுக்கும் இது பொருந்தும். சுடலை மாடன் காவல் தெய்வம் மட்டுமல்ல. துர்மரணம் அல்லது தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக சுடலை வழிபடப் படுவதாக நம்பப் படுகிறது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் சீவலப்பேரி அருகில் உள்ள சுடலை மாடசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரே நேரத்தில் பரண் அமைத்து நூற்றுக்கணக்கான பன்றிகள், ஆடு, கோழிகள் பலியிடப் படுகின்றன. சாமி ஆடுபவர்கள் வண்ணமிகு கால்சட்டைகள் அணிந்து இடுப்பில் சலங்கை மணிகள் கோத்த பெல்ட் மாட்டிக் கொண்டு ஆடுவார்கள். இரவு நேரத்தில் அவர்கள் சாமி யாடுவது பயமளிப்பதாக இருக்கும். மேலும், அவர்கள் பெரும் தீப்பந்தங்களைக் கையில் ஏந்திக் கொண்டு ஆடுவார்கள். அருகில் நிற்பவர் களைக்கூட அதன் வெப்பம் சுட்டெரிக்கும். ஆனால், சாமியாடு பவர்கள் இது எதுவும் இன்றிப் பந்தங்களை மார்பில் ஏந்தியபடி ஆடிக்கொண்டிருப்பர்.
இரவில் சுடலை மாடன் சுடுகாட்டைச் சுற்றி வருவது ‘வேட்டைக்குச் செல்லுதல்’ என்று கூறப்படுகிறது. வேட்டை முடித்துத் திரும்பும் போது சுடலை மாடசாமி பிணத்துடன் திரும்புவாராம். இப்போ தெல்லாம் வேட்டைக்குச் செல்வதாகக் கூறி தாரை தப்பட்டை களுடன் சிறிது தூரம் மட்டும் சென்று விட்டுத் திரும்பிவிடு கின்றனர். பாளையங்கோட்டை பகுதியில் இந்த அளவு இல்லாவிட்டாலும் சுடலை மாடன், பேச்சியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன. இதுபோல பாளையங்கோட்டை பகுதியில் உள்ள வேறு பல ஆண் சிறு தெய்வங்களுக்கும் விழா எடுக்கப்படுகிறது.
மதுரை வீரன், மனை காத்த பெருமாள், கருப்பசாமி, பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், முனீஸ்வரன், மாயாண்டி, பலவேசம், மாடன், நல்லமாடன், அய்யனார், பூதத்தான், பட்டவராயன், இருளன் ஆகிய தெய்வங்களுக்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கலந்து கொள்கின்றனர் என்பது சிறப்பம்சமாகும்.
பாளையங்கோட்டை பகுதியில் எல்லையம்மன் வழிபாடும் சிறப்பாக உள்ளது என்று முல்லை முருகன் கூறுகிறார். பிற பகுதிகளில் வழக்கத்தில் உள்ள ரேணுகா தேவி வழிபாடே இங்கு எல்லையம்மன் வழிபாடாக உள்ளது. ரேணுகா தேவி யம்மனே எல்லையம்மன் ஆகும். பாளையங்கோட்டையின் கிழக்கு எல்லையைக் காப்பவளாக எல்லையம்மன் உள்ளான். இந்தக் கிழக்குப் பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். இங்குள்ள
பொன்னாண்டான் குளம் பெருகி வழியும்போது பாம்புகளும் நிலப்பகுதிக்குள் புகுந்துவிடுமாம். அவை மேட்டுப்பகுதியில் ஏறி தங்கள் வாழ்விடங்களைத் தேடுமாம். அப்போது இங்குள்ள நல்ல தண்ணீர்க் கிணற்றில் அவை உறையும். இதனால் தண்ணீர் எடுக்க வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவே எல்லையம்மன் கோயில் அமைத்து வழிபடப் படுவதாகக் கூறப்படுகிறது.
திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, அம்பா சமுத்திரம் போன்ற ஊர்களில் இருந்து சரக்குகளை ஏற்றிவரும் பொதி மாட்டு வண்டிகள் சந்திக்கும் இடமாகவும் பாளையங்கோட்டை இருந்துள்ளது. மாடுகள் இளைப்பாறவும், மாட்டு வண்டிகளைப் பழுது பார்க்கவும், மாடுகளுக்கு லாடம் அடிக்கவும், வெளியூர்களில் இருந்து வில் வண்டிகளில் வருபவர்கள் இளைப்பாறவும் இந்தச் சந்திப்பு களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவ்வாறு வரும் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவும் எல்லையம்மன் உள்ளாள்.
அந்தக் காலத்தில் எல்லாம் இக்கோயிலில் எப்போதும் நெருப்பு எரிந்துகொண்டேயிருக்குமாம். அப்போதெல்லாம் தீப்பெட்டி இல்லாததால் இந்த நெருப்பே வீடுகளில் அடுப்புப் பற்றவைக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், எந்த நேரமும் நெருப்பு எரிந்து கொண்டேயிருப்பதால் பாம்புகளும் அந்தப் பகுதிக்கு வராது என்பதும் ஒரு காரணம் என்கிறார் முல்லை முருகன்.
இக்கோயிலில் நடைபெறும் தீமிதி விழா இப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மேலும், இக்கோயிலில் 300 வருடத்துக்கு முந்தைய அரசமரம் ஒன்று உள்ளதாம். அதன் அடியில் நாக அரசிக்குக் கோயிலொன்றும் உள்ளது. ரேணுகா தேவிக்கு வழிபாடு நடக்கும்போது நாக அரசிக்கும் வழிபாடு நடக்கிறது. மேலும், இங்குள்ள எல்லை யம்மன் பாதத்தில் ஆண், பெண் தலைகள் உள்ளன. இவை இக் கோயிலை உருவாக்கிய தம்பதிகளின் தலை என்றும், அம்மனை வழிபட்ட சகோதர, சகோதரிகளின் தலை என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, வட மாவட்டங்களில் பிரசித்திபெற்ற திரெளபதி யம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாகக் காணப்படுகிறது. இங்கு திரெளபதியம்மன் காவல் தெய்வமாகவே வழிபடப்படுகிறாள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பூக்குழி நடைபெறுகிறது. முன்னர் இங்கு ஆடு, கோழி பலி
நடைபெற்றுள்ளது. காலப்போக்கில் அவை நிறுத்தப்பட்டு அந்த இடத்தில் தட்சிணாமூர்த்தி சிலை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நெல்லைச் சீமை மட்டுமல்லாமல் குமரி, இராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கிறார்கள்.
பாளை நகரின் தெற்குப் பகுதியில் அங்காள பரமேஸ்வர் காவல் தெய்வமாக உள்ளாள். முன்னர் சிறுதெய்வ வழிபாட்டுத் தலமாக இருந்த இக்கோயில் இன்று கொடிமரம், நந்தி, தலவிருட்சம் எல்லாம் பெற்றுள்ளது. இங்கு வீரபத்திரர், பைரவன், பிரமாச்சி, மதுரைவீரன், பேச்சி, சுடலை மாடன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், இருளன் போன்ற நாட்டுப்புற தெய்வங்கள் இருந்த போதும் சைவ, வைணவக் கோயில்கள் போன்றே பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு அங்காள பரமேஸ்வரி அமர்ந்த நிலையிலும், அருகில் குரு நாதசுவாமி என்பவர் நின்ற நிலையிலும் உள்ளனர். இது பண்டைச் சமுதாயத்தில் நிலவிய பெண் வழிச் சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. என்று நாட்டார் வழக்காறுகள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்து ஒரு வித்தியாசமான தெய்வம் நம்பியாற்றங்கரையில் உள்ளது. அதைப்பற்றி காண்போம்.
(நதி வற்றாமல் ஓடும்)


