தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகில் உள்ள மணத்தியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அண்ணாதுரை(36). இவர் மத்திய ரிசர்வ் போலிஸ் படை, மகராஷ்ரா பட்டாலின் உதவி சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கருங்குளம் சி.எம்.எஸ். கோயில் தெருவை சேர்ந்த சுடலை மகள் தேவகனி(30) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கனிக்ஷா(7), நவீன்(4) என்ற குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் படிப்புக்காக இவர் குடும்பம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகின்றனர்.
கடந்த வாரம் அண்ணாதுரைக்கு பணியிடமாற்ற ஆணை வந்தது. இவர் சண்டிகார் ஐந்தாவது சிக்னல் பட்டாலியனுக்கு மாறுதல் செய்யப்பட்டார். எனவே அவர் பாளையங்கோட்டைக்கு வந்து மனைவி குழந்தைகளுடன் 10 நாள் தங்கி இருந்தார். அதன் பின் கடந்த 29ந்தேதி இரவு 9.10 மணிக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பினார். 30ந்தேதி வரை மனைவியுடன் போனில் பேசிகொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது போன் துண்டிக்கப்பட்டது. ஆனால் குறுந்தகவல் சேவை மட்டும் வந்துக் கொண்டிருந்தது.
தகவல் தெரியாமல் தேவகனி தவித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3ந் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் அவரது பெட்டி மற்றும் பொருள்கள் கிடந்துள்ளது. இதை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் தேவகனியுடன் தொடர்பு கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகனி, பாளையங்கோட்டை போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
மத்திய ரிசர்வ் போலிஸ் படை உதவி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.