
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட மானாவாரி பகுதிகளான கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து, குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாக பயறு வகைகளின் உள்ளுர் சந்தை விலை மிக குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க உளுந்து நேரடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் உற்பத்தியாளர் கம்பெனியைச் சார்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக மாவட்டத்தில் உளுந்து நேரடி கொள்முதல் செய்வதற்கு, கோவில்பட்டி மானாவாரி உற்பத்தியாளர் கம்பெனியை முதன்மை கொள்முதல் முகமையாக அங்கீகாரம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி மற்றும் வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக “நேபட்” நிறுவனத்திற்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தார், எட்டையபுரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கொள்முதல் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளுர் சந்தை விலை உளுந்து கிலோவிற்கு ரூ.40/- முதல் ரூ.44/- வரை உள்ளது. ஆனால், நேரடிக்கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் உளுந்துக்கு “நேபட்” தர நிர்ணயப்படி கிலோவிற்கு ரூ.54/- வழங்கப்படும்.
எனவே நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு உளுந்து விற்க விரும்பும் விவசாயிகள் பட்டா, அடங்கல், வேளாண்மைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட பயிர் சாகுபடி சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விபரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உளுந்து கொள்முதல் ஜீன் மாதம் வரை நடைபெறும். விவசாய பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள உளுந்தை அதிக விலைக்கு விற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.