
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடி பெருமாள் கோவிலில் கொடியேற்று விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட நவதிருப்பதி ஆலயங்களில் 3வது ஸ்தலமான திருப்புளியங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் கோவிலில் பங்குனி ப்ரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் 11நாட்கள் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அர்ச்சகர்கள் குமார் பட்டர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி ஏற்றிவைத்தனர். இதில், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பாவெங்கடாச்சாரி, கண்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
திருவிழாவில் நாள்தோறும் இரவு 7மணிக்கு பெருமாள் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறும். விழாவில் தொடர்ந்து, 5ம் திருவிழாவான 15ம் தேதி கருடசேவையும், 9ம் திருவிழாவான 19ம் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஆய்வாளர் ரவிச்சந்திரன், தக்கார் அஜீத் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.